தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள் - Dindigul lock

திண்டுக்கல் : கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள், தமிழ்நாடு அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

Dindigul lock manufacturing industry affected by corona lockdown
வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்

By

Published : May 20, 2020, 9:18 PM IST

இந்திய அளவில் பூட்டுக்கு புகழ் பெற்றது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம். இங்கு பிரதான தொழிலான பூட்டு உற்பத்தியை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கிற்கு தளர்வளிக்கப்பட்டது. மூன்றாவது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் பூட்டு பட்டறைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், பெயரளவில் இயங்கப்படும் பூட்டு பட்டறைகளால் வருமானம் வர வழியின்றி பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள் வேதைனையோடு வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தொழிலாளி சேக் அப்துல்லா கூறுகையில், ”சாதாரண நாட்களில் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரைதான் வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த ஊரடங்கின் காரணமாக வெறும் ஒரு நாளுக்கு 100 ரூபாய் கிடைப்பது கூட சிரமமாக உள்ளது. புதிதாக எந்த ஆர்டரும் வராத நிலையில் கரோனாவிற்கு முந்தைய ஆர்டர்களை தான் செய்து வருகிறோம். இனி கட்டுமான பணிகள் மீண்டும் நடைபெற்றால்தான் எங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

அரசு அறிவித்த இலவச ரேஷன் பொருட்களை வைத்து எத்தனை நாட்களுக்கு சமாளிக்க முடியும். இதனால் குழந்தைகளும், நாங்களும் பல நாட்களாக பசியும் பட்டியுனிமாகத்தான் தவித்து வருகிறோம். பூட்டு பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தருகிறது. உடமைகளை பாதுகாத்திடும் பூட்டுகளை உருவாக்குகிறோம். ஆனால் எங்கள் நலனை பாதுகாக்க யாருமில்லை.

பூட்டு உற்பத்தி தொழிலை மேம்படுத்த இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் ஊதிய உயர்வு என்ற ஒன்றே எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இத்தனை காலம் இதனை நம்பி இருந்ததால் இந்த தொழிலையே செய்து வருகிறோம். திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கிய பின்னரும்கூட எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்றார்.

வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்
இது குறித்து பூட்டு பட்டறை உரிமையாளர் கருணாமூர்த்தி கூறுகையில், “நான் 55 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இன்றைய சூழலில் பூட்டு உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டநிலையில் சிறு அளவில்தான் பட்டறைகள் இயங்கிவருகின்றன. ஒரு காலத்தில் திண்டுக்கல்லுக்கே அடையாளமாக இருந்த பூட்டு தொழில் இன்று நாகல் நகர், அடியனூத்து, நல்லாம்பட்டி போன்ற சில பகுதிகளில் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்படுகிறது. அதிலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உற்பத்தி இல்லை. பூட்டு உற்பத்தி தொழில் பெரிதும் நலிவடைந்து போன இந்தச் சூழலில் போதிய வருமானம் இல்லாததால் பல தொழிலாளர்கள் வேறு வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றால் நொடித்துப்போன பூட்டு தொழில் பெரிதும் அடி வாங்கியுள்ளது. போதாக்குறைக்கு இந்த கரோனா பாதிப்பு பெரும் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை சீராக எப்படியும் குறைந்தது 4 முதல் 6 மாதங்களாவது பிடிக்கும். அதுவரைக்கும் இந்த தொழிலை மட்டும் நம்பியுள்ள தொழிலாளர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு இப்படி சம்பளம் வழங்குவது என்ற பெரும் குழப்பம் பட்டறை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவை சிறு அளவிலான தொழில் என்பதால் அன்றாடம் தொழில் நடந்தால் தான் சம்பளம் வழங்கமுடியும்” என்றார்.
அன்றாடம் தொழில் நடந்தால் வாழ்க்கையை ஓட்ட முடியுமென்ற நிலையில் காலம் காலமாக இந்த பூட்டு உற்பத்தி தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க முன் வரவேண்டும்.

இதையும் படிங்க :கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details