திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிகள் வாங்க முக்கியமான இடமாக காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் உத்தரவை மதிக்காமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி காய்கறிகளை வாங்க வந்தனர்.
இதனால் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு பதிலாக நான்கு பகுதிகளாகப் பிரித்து வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளை அறிவுறுத்தியது.
இதன் பின்னர், திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேட்டுப்பட்டி, ஆரம் காலனி, ரவுண்ட் ரோடு, பாரதி புரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. நான்கு இடங்களில் மார்க்கெட் பிரிக்கப்பட்டு வியாபாரம் நடந்த போதிலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் காய்கறி வாங்க வருபவர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நின்று காய்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஒலிபெருக்கி மூலம் வியாபாரிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், வரிசையில் மூன்று அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வையும் காவல்துறை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க... கரோனா முன்னெச்சரிக்கை: காய்கறி சந்தையாக மாறிய பேருந்து நிலையம்