திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட 117.072 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே சந்தை மதிப்பில் ரூ. 35 லட்சம்வரை விலை போகும் நிலத்திற்கு அரசு மிக குறைவான தொகையை கொடுத்துவருவதால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதை கண்டித்து நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்ட கிரய பத்திரங்களின் நகல்கள் தாசில்தாரிடம் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ரெட்டியபட்டி, காவிரியம்மாபட்டி, அரசப்பிள்ளைபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி, பழனிகவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி அறிவழகன் கூறுகையில் ”எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் விவசாய நிலங்களை எங்களிடமிருந்து கையகப்படுத்தும் அரசு அதற்கு முறையான இழப்பீடு தரவேண்டும். சந்தை விலையைவிட பன்மடங்கு குறைவாக ஒரு சென்ட் இடத்திற்கு ஆயிரத்து 200 ரூபாய் தரப்படுகிறது.
விவசாய நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு ஒரு ஏக்கர் நிலம் கொண்டுள்ள விவசாயிகளுக்கு இதனால் என்ன இழப்பீடு கிடைத்திடும். எப்படி எங்களது வாழ்வாதாரம் அதன்பின்பு தொடரும். எங்களிடம் உள்ள வீடு, காடு அத்தனையும் காலி செய்து தரும்படி கூறினால் அதற்கான இழப்பீடுமின்றி எப்படி ஏற்க முடியும். கண்டிப்பாக ஒருபோதும் நாங்கள் விளைநிலங்களை தரப்போவதில்லை. அரசின் செய்கை இதுபோல தொடரும்பட்சத்தில் தற்கொலையைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு நடனம், நாடகம் பயிற்சி !