வரலாறுகள் உருவாகவும் அதை உருமாற்ற காரணமான தொழிலாளர்கள் தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் உருவானது தான் தொழிலாளர் தினம். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இயந்திர மயமாக்குதலாலும் பல தொழில்கள் நலிவடைந்து போனது. நெசவு மற்றும் சிறு தொழில்களை நம்பி மிகப்பெரிய பின்புலம் இல்லாத சிறு சிறு குழுக்களாக உடல் உழைப்பினை நம்பி இயங்கும் தொழிலாளர்கள் வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.
வறுமையின் அடையாளம் கண்ணீர் - தன்மானத்தை இழக்காத தொழிலாளி
திண்டுக்கல் அருகே கொளுத்தும் வெயிலில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் உழைப்பின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றனர்.
இது போன்றதொரு சூழலில்தான் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டி மலையில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கள்ளிப்பட்டி. கிராமம் வறண்ட பூமி என்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கல் உடைப்பது மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை தான் நம்பி உள்ளனர். கள்ளிப்பட்டியை சுற்றி 5க்கும் மேற்பட்ட மலைகளில் கல் உடைக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது இயந்திரங்களால் உடைக்கப்படும் ஜல்லி கற்களையே அதிகமாக கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால், கைகளால் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அன்றாட வாழ்விற்கு அல்லல்படும் நிலை இருந்தாலும் தங்கள் உழைப்பை ஒருபோதும் கைவிடாமல் கொளுத்தும் வெயிலிலும் பாறைகளை உடைத்து கற்கள் எடுத்து வேலை செய்து வருகின்றனர். இதில், ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. இருப்பினும் வருமானம் இல்லை என்பதால் வீட்டில் இருக்க முடியாது இல்லையா என்று ஒரு தொழிலாளர் கூறியது மனதில் ஆணி அடித்து உறைந்து போன வார்த்தையாக இருக்கிறது.