தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

நகரின் நடுவில் திண்டு போல ஒரு கல்மலை இருப்பதால் திண்டுக்கல் ஆகியிருக்கலாம் என, காரணப்பெயர் கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாட்டின் 11ஆவது மாநகராட்சியாகும். திப்பு சுல்தானின் ஆளுகைக்கு கீழிருந்த இம்மாவட்டத்திற்கு நீண்ட வரலாறும் உண்டு. சிவகங்கை ராணிக்கு அடைக்கலம் கொடுத்தது, ஆங்கிலேயர்களின் போர் பாசறையாக இருந்தது என, கடந்த காலச் சுவடுகளை பலவற்றைத் தன்னுள் தாங்கி நிற்கிறது இங்குள்ள கோட்டை. காய்கறி, பழங்கள், பூ வியாபாரத்திற்கான முனையமாக இருக்கிறது. அறுபடை வீடுகளில் பழநியையும், கோடைவாசஸ்தலமாகக் கொடைக்கானலையும் கொண்டுள்ளது திண்டுக்கல். இரும்பு பூட்டு, பெட்டகங்களுக்குப் பெயர் போன இம்மாவட்டம் தற்போது ஊண் சோறுக்காகவும் (பிரியாணி) அறியப்படுகிறது. மாவட்டத்தின் வடக்கில் திருப்பூர், கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி, தெற்கு-தென்கிழக்கில் மதுரை, தென்மேற்கில் தேனி, மேற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

dindigul district watch
திண்டுக்கல் தொகுதிகள் வலம்

By

Published : Mar 17, 2021, 4:57 PM IST

வாசல்:

திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பொதுத் தொகுதிகளையும், நிலக்கோட்டை தனித்தொகுதியையும் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

பழநி:அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலும், கோடைவாசஸ்தலமான கொடைக்கானலும், இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு வரை தனித் தொகுதியாக இருந்த பழநி, அதற்குப் பிறகான தேர்தலில் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. விவசாயமே பிரதானமாக உள்ள இங்கு சுற்றுலாவும் பலருக்கு வேலைவாய்ப்பைத் தருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்லும் பழநியில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கொடைக்கானல் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டங்கள் இல்லாதது, கொடைக்கானல் தவிர்த்த பிற மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. பச்சையாறில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே நிறைவேற்றப்படவில்லை.

ஒட்டன்சத்திரம்:கோயம்பேடுக்கு அடுத்தப்படியாகப் பெரிய காய்கறிச் சந்தையான ஒட்டன்சத்திரம் சந்தை அமைந்துள்ள தொகுதி. அண்டை மாநிலமான கேரளாவின் 60 விழுக்காடு காய்கறி தேவைகள் இங்கிருந்தே அனுப்படுகின்றது. சுற்று வட்டாரக் கிராமங்களில் விளையும் காய்கறிகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

காய்கறிகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும், காய்கறி சந்தையின் கழிவுகளை சாலையின் ஓரத்தில் போட்டு எரிக்கும் அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில் தொடங்க வேண்டும் என்பன தொகுதியின் பிரதான கோரிக்கையாக உள்ளன.

ஆத்தூர்:மலையும், மலை சார்ந்தப் பகுதிகளைக் கொண்டது இந்தத் தொகுதி. ஆத்தூர் நீர்த்தேக்கம், மருதாநதி அணையும் இங்குள்ளன. மலைத்தோட்ட விவசாயம் அதிகம் இந்தத் தொகுதியில் நடைபெறுகிறது. தொகுதியில் உள்ள சின்னாளப்பட்டியில் உற்பத்தியாகும் சுங்குடிச் சேலை பிரபலமானதாகும். நூல் விலை ஏற்றம், ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால், இந்தத் தொழில் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

இங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், தொகுதிக்குள் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும், இங்குள்ள கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பவை தொகுதிவாசிகளின் கோரிக்கைகளாக உள்ளன.

நிலக்கோட்டை (தனி) :விவசாயத்தைப் பிரதானமாக கொண்ட தொகுதி. மாவட்டத்திலுள்ள தனித்தொகுதியும் கூட. இங்கு விளையும் மல்லி மிகவும் பிரபலம். அதைத் தவிர ரோஜா, முல்லை, கனகாம்பரம், செண்டு மல்லி என பவ்வேறு பூக்களையும், விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

பண்டிகைகள், விழாக் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பூக்களின் விலை விழ்ச்சி அடைந்து விடுவதால் பூக்களை பதப்படுத்தி பாதுகாக்க, குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும், வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயத்தையும், நிலக்கோட்டை பகுதியில் கால்நடை வளர்ப்பையும் பாதுகாக்க வேண்டும் என்பன தொகுதியின் கோரிக்கைகளாக உள்ளன.

நத்தம்: இந்தத் தொகுதியில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், இதுவரை இருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். மாம்பழம் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது இந்தத் தொகுதி. மா, பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயத்தைத் தவிர ஆயத்த ஆடை தயாரிப்பும் சில பகுதிகளில் நடைபெறுகிறது.

மேல்நிலைக் கல்வி வரை பயிலும் மாணவர்கள், கல்லூரி படிப்பிற்காக மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கே செல்ல வேண்டும். இதனால் தொகுதிக்குள் கல்லூரி ஒன்று தொடங்கப்பட வேண்டும். விவசாயம், ஆயத்த ஆடை தொழில் தவிர வேறு வேலை வாய்ப்புகளுக்கு வழியில்லாததால், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மா, புளி சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொகுதியில் உள்ளன.

திண்டுக்கல்: காய்கறிகள், பழம், பூ வியாபாரிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது இந்தத் தொகுதியில் உள்ள திண்டுக்கல் நகரம். இது திருச்சி, கரூர், தேனி, சிவகங்கை நகரங்களை இணைக்கும் மையமாகவும் உள்ளது. இந்தத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைக்குப் புகழ் பெற்றது.

நகரின் மையத்தில் இருக்கும் காமராஜர் பேருந்து நிலையத்தைப் புறவழிச் சாலைக்கு மாற்றி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் பிரதான கோரிக்கை இன்றளவும் கோரிக்கையாகவேத் தொடர்கிறது. இங்குள்ள மலர் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், பழநி சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தொகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வேடசந்தூர்: மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள வேடச்சந்தூர் தொகுதியில் தக்காளி, வெங்காயம், முருங்கை அதிகம் பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தப்படியாக நூற்பாலைகளும் மக்களுக்கு வேலை வழங்கி வருகின்றன. இங்குள்ள அய்யலூரில் நடக்கும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலம். இங்குள்ள மலை கிராமங்களில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

தக்காளி, வெங்காயம் அதிகம் விளைவதால், அதனைப் பதப்படுத்தும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கால்நடை வளர்ப்பும் கணிசமான அளவில் இருப்பதால் கூட்டுறவு பால் பண்ணைகள் ஏற்படுத்தி, பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

களநிலவரம்:

மலைக்கோட்டை நகரம், தென் தமிழ்நாட்டின் பெரிய காய்கறிச் சந்தையை கொண்ட மாவட்டம் என்ற சிறப்புடைய திண்டுக்கல்லில், புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஆத்தூர், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மாவட்டம் முழுவதும் இருக்கின்றன.

மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் மூன்றில் அதிமுகவும், நான்கில் திமுகவும் வென்றுள்ளன. இந்த முறை நிலக்கோட்டையில் உறுதியாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் அத்தொகுதியின் வேட்பாளரை முதலில் அறிவித்துள்ளது அதிமுக. திண்டுக்கல், பழநி தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களம் காணுகின்றன. தனித்தொகுதியில் வெற்றி என்ற உறுதியுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலைச் சந்திக்கும் அதிமுக, இந்த முறை திமுகவிற்கு 'டஃப்' கொடுக்க அதிகம் உழைக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details