தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் மீது புகார் கொடுக்கவந்தவர்களைத் தாக்கிய துணை கண்காணிப்பாளர்!

திண்டுக்கல்: பழனி அருகே காவலர் மீது புகார் கொடுக்க வந்தவர்களை காவல் துணை கண்காணிப்பாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர்கணேஷ்

By

Published : Oct 18, 2019, 3:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சின்னகலையமுத்தூர் கிராமம். இங்கு வசித்துவருபவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். முறுக்கு வியாபாரம் செய்துவரும் ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக மூத்த மகன் சங்கர் கணேஷ் உள்ளார். இளையமகன் கல்லூரியில் படித்துவருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக அவரின் இளையமகன் சாட்சியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்வதால் பழனி தாலுகா காவல்நிலைய காவலர் வேந்தனுக்கும் ராதாகிருஷ்ணன் குடும்பத்தாருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வியாபாரத்திற்கு சென்ற மூத்தமகன் சங்கர் கணேஷை வழிமறித்து வாகன சோதனை என்ற பெயரில் தகராறில் காவலர் வேந்தன் ஈடுபட்டுள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் சங்கர் கணேஷுடன் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேந்தன். வாக்குவாதம் முற்றியதில் வேந்தன் சங்கர்கணேஷை கடுமையாகத் தாக்கியதில் கண், வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வேந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தனிடம் சங்கரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரை திரும்பப்பெறக் கூறி ராதாகிருஷ்ணனை வேந்தன் அடியாள்களை கொண்டு மிரட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணேஷ் பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த காவல் துறையினரும் காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தனும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவேகானந்தன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தைப் பிடித்து காவல் நிலையத்திற்குள் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடாவடியில் ஈடுபட்ட காவலர் வேந்தன் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்களை காவல் துறையினர் தாக்கியது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் கணேஷ் பேட்டி

மேலும் படிக்க: பெண்னை தாக்கிய விவகாரம்: காவலர்கள் மூன்று பேருக்கு தலா 1 லட்சம் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details