திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருபவர்கள் சுப்புலட்சுமி - கணேசன் தம்பதி.
இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரையில் உள்ள அம்பலகாரன்பட்டி கிராமத்தில் குடியிருந்தபோது ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலர் பழனிச்சாமி அருகில் குடியிருந்து உறவினர்போல் பழகிவந்துள்ளார்.
பின்பு பணியின் காரணமாக ஒட்டன்சத்திரத்திற்கு இடம்பெயர்ந்த சுப்புலட்சுமி-கணேசன் தம்பதி, சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட சேமித்துவைத்திருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை 2019 நவம்பர் 8ஆம் தேதியன்று பழனிச்சாமியிடம் அளித்தனர்.
அப்போது, அவர்களிடம் பழனிச்சாமி, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர ஏற்பாடு செய்வதாகக் கூறி நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளாகியும் அவர் எதையும் செய்யவில்லை.
பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தம்பதி, அந்தப் பணத்தை திரும்பக் கேட்டபோது தர மறுத்துவந்துள்ளார் பழனிச்சாமி. பின்பு இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சுப்புலட்சுமி.
மேலும் பழனிச்சாமியை தொடர்புகொண்டு பணம் கேட்டபோது உடனே பழனிச்சாமி அவரது குடும்பத்துடன் வந்து தன்னைத் தகாத வார்த்தையில் திட்டியதுடன் தாக்க முற்பட்டதாக மீண்டும் 2020 மே 7ஆம் அன்று சுப்புலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.