திண்டுக்கல்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வருகிற மே 5ஆம் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழங்க மாநாடு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 12 மணி நேரம் வேலை என்ற கருத்தில் மாற்றம் இல்லை. கட்டாயம் 12 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் தான் இப்பொழுது இருக்கும் நிலைமை, ஆள் பற்றாக்குறை மாறும். வட இந்தியர்கள் பிரச்னை ஏற்பட்டு அவர்கள் ஊர்களுக்குச் செல்லும் போது, தொழிலதிபர்கள் எல்லாம் பதறிப் போனார்கள். காரணம் ஹோட்டல் கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதற்காக.
இதையெல்லாம் மனதில் வைத்து, தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை நேரத்தை சீரமைத்து அமல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. நாங்கள் வேறு வேறு இல்லை, இருவரும் இணைப்புப் பாலங்கள்.
இப்பொழுது பல இடங்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்கு அதற்கான கூலியும் கொடுத்து வருகிறோம். அதே வேலையில் நாங்களும் 18 மணி நேரம் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். மேலும் தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு தொழிற்சாலைகள் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகத் தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.