திண்டுக்கல் கலைச்செல்வன் என்பவரது மகன் ராம்குமார் (43). இவர் கிருஷ்ணராவ் தெருவில் வசித்து வருகிறார். சகோதரர் திருமணமாகி கேரளாவில் வசிக்கிறார். இவருக்குத் திருமணமாகி குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து பெற்று தன் தாயுடன் தனியாக வசித்து வருகிறார். பழனி ரோடு முருகபவனம் அருகில் சுற்றியுள்ள பல வீடுகளுக்கு உரிமையாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராம்குமார் மாலை பழனி ரோட்டில் உள்ள ராம் ஆட்டோ பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவரது தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் கவடகாரத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (29), பாலகிருஷ்ணா புரம் சிவராஜா (34), ஆர்.வி. நகர் கோகுல் (21), குணசீலன் (23), மேற்கு அசோக் நகர் சசிகுமார் (22), ஒய்.எம்.பட்டி. சஞ்சய் (22), ஆர்.வி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) ஆகியோரை இரவோடு இரவாக காவல் துறையினர் கைது செய்தனர்.
அதனையடுத்த விசாரணையில், ராம்குமாருக்கு கடை, வீட்டு வாடகை மற்றும் இதர வருமானம் என மாதம் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. குற்றவாளிகள் 7 பேருமே ராம்குமாரோடு ஏற்கனவே நல்ல தொடர்பில் இருந்தவர்கள். மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தோடு ராம்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் மறுத்து தன் வாகனத்தில் சென்றபோது, ராம் ஆட்டோ பெட்ரோல் பங்க் அருகே மணிகண்டன், சிவராஜா ஆகியோர் மடக்கி மீண்டும் மிரட்டியுள்ளனர்.
அப்போது குற்றவாசிகள் நல்ல மதுபோதையில் இருந்துள்ளதால் பணம் தராத ஆத்திரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியபோது போதையில் குத்திவிட்டனர். ராம்குமார் மயங்கி விழுந்ததைக் கண்டு தப்பியோடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.