திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி பிரிவில் இருந்து வில்பட்டி கிராமம் வரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அமைக்கப்பட்ட சாலை இன்று காலை பெயர்ந்துவிட்டதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை அமைக்க வந்தவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரை மக்கள் சிறைப்பிடித்தனர். இதன் காரணமாக வில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சாலை அமைக்கும் இடத்திற்கு வட்டாட்சியர் வில்சன், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் பல லட்சம் ரூபாய் நாசமடைந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மீண்டும் தரமான சாலை அமைக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்தனர். இனி தரமான சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தார் சாலை தரமில்லை' - ஒப்பந்ததாரரை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்! இதையும் படியுங்க: 'தேர்வர்கள் முறைகேடுகளுக்கு துணை போக வேண்டாம்!' - டிஎன்பிஎஸ்சி