திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் தேனி, கம்பம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது கால்நடைகளை கொண்டுவந்து விற்பனை செய்வதும், அவர்களுக்குத் தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதும் வழக்கம்.
அதேபோல் கேரள மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் மாடுகள் விற்பனையாகி வியாபாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. அதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் ஏராளமானோர் தங்களது கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டுவருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை அதனால் கால்நடைகளின் வரத்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலை கடுமையாக குறைந்துள்ளது. குறிப்பாக 50 ஆயிரம் முதல் 60ஆயிரம் விற்றுவந்த வளர்ப்பு பால் பசுமாடுகள் இன்று வெறும் ரூ.40 ஆயிரம் முதல் ரு. 45 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. அதேபோல வளர்ப்பு பால் எருமை மாடுகள் ரூ.45ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான விற்பனையிலிருந்து விலை குறைந்து ரூ.35 முதல் ரூ.43ஆயிரம் என விலை இறங்கியது.
வளர்ப்பு கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், பசு கன்றுகள் ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளானதாக தெரிவித்தனர்.