திண்டுக்கல்:பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு முன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் பழனி கோயில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. பழனி ஆண்டவர் பெண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை ஐஜி அஸ்ராகர்க், மாவட்ட ஆட்சியர் விசாகன், டிஐஜி அபினவ் குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற இருப்பதால் வருகிற 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்யமுடியாது என்றும், பாதயாத்திரை வரும் பக்தர்கள் நவபாஷாண சிலையை தரிசனம் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட நாட்களில் பழனி கோவிலுக்கு வருவதை தவிர்த்து கும்பாபிஷேகம் முடிந்தபிறகு கோவிலுக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி-தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்கள் பழனி நகருக்குள் வர கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது மலை கோவிலுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதில் 58 வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவிஐபி பாஸ் உள்ளவர்கள் என ஆயிரம் பேர் மட்டுமே ரோப்கார் மற்றும் மின்இழுவைரயில் ஆகியவற்றில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் படிப்பாதை வழியாக மட்டுமே செல்லவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மலைக்கோவில் பிராகரத்தை 39 இடங்களாக பிரித்துள்ளதாகவும், அங்கிருந்து சாமிதரிசனம் செய்யும் வழி, பாதுகாப்பாக வெளியேறுவது மற்றும் பழனி அடிவாரம் பகுதியில் மூன்று இடங்களில் 70 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் வகையில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி பாஸ்கரன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா!