திண்டுக்கல்: தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், அந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் ஊர்மக்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றுவர். குறிப்பாக, சிலர் மொட்டை எடுப்பர். சிலர் பூமுடி போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம்.
சிலர் ஆடு, கிடா, கோழி போன்றவை உயிரினங்களை நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும், சிறிது செல்வாக்குப் படைத்தவர்களாக இருப்பின் வெள்ளி, தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் செலுத்துவதாகவும் வேண்டிக் கொள்வர். அதே போல் திருவிழா அன்று நிறைவேற்றவும் செய்வர். இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதாவது பிறந்த பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யாருமே கலந்து கொள்ளாமல் வெறும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். அதில் நேர்த்திக்கடனாக வந்த ஆடுகளை வெட்டி ஒரு ஊருக்கே படையல் தயார் செய்து விருந்தளிப்பர். இதுவே இந்த திருவிழாவின் சிறப்பு ஆகும். சில கிராமங்களில் 5 அல்லது 3 ஆண்டு போன்று ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் என்பது வழக்கம்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ப.விராலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு கோட்டை கருப்பண சாமி கோயிலில் ஆடி திருவிழா சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த திருவிழாவில் இரவு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற உள்ளது.