தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியல் இனத்தவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - வருவாய்த்துறையினர் தலைமையிலான அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை

சித்தரேவு என்ற கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையினர் தலைமையிலான அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : May 11, 2022, 5:40 PM IST

Updated : May 11, 2022, 5:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சியில் உள்ள சித்தரேவு என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தநிலையில், உள்ளூர் நிர்வாகப் பிரச்னை காரணமாக கோயில் பராமரிப்பின்றி, பூட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது.

இதன் காரணமாக சித்தரேவு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர், அதே பகுதியில் வழிபாட்டிற்காக புதிதாக உச்சிகாளியம்மன் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயிலைக்கட்டி, கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கோயிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழனி-கோவை நெடுஞ்சாலையில் இன்று (மே 11) சாலைமறியல் நடைபெற்றது.

கோயிலுக்குள் அனுமதி வேண்டும்: பழைய கோயில் பூட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சார்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமுதாயத்தினரை உள்ளே விட அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அனைவரையும் சாமி கும்பிட அனுமதிக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கோயில் கட்டிய ஒரு சமுதாயத்தினர் கூறியதாவது: பழைய கோயில் சிதிலமடைந்ததால் சொந்தமாக 2 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, குடும்பத்திற்கு 40ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு, எங்களது நிதிப் பங்களிப்பில், புதிதாக உச்சிகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோயிலைக் கட்டினோம். கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை முடிந்து தற்போது இரண்டு மாதமாகியுள்ள நிலையில் தற்போது, புதிதாக கட்டப்பட்ட கோயில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி, கோயிலில் தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஒரு பிரிவினர் கூறிப் பிரச்னை ஏற்படுத்துவதாகவும், இதனையடுத்து நாங்கள் செய்த செலவில் ஒரு தொகையை கொடுத்துவிட்டு கோயிலுக்குள் வாருங்கள் என்றோம்.

சிலரின் தூண்டுதலே இதற்குக் காரணம்: இல்லாவிட்டால் நாங்கள் செலவு செய்த பணத்தை முழுமையாக கொடுத்தால் நாங்கள் வெளியேறிக் கொள்கிறோம் அல்லது அவர்களே சொந்தமாக புதிய கோயில் கட்டினால் அதற்கு நாங்களும் நிதி உதவி செய்யத்தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் எதற்கும் சம்மதிக்காமல் ஒரு சிலரின் தூண்டுதலின்பேரில், ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகக் கூறியுள்ளனர்.

உச்சி காளியம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறையினர் சமாதானம்: இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து வருவாய்த்துறையினர் தலைமையிலான அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், கோயில் இடத்தை அளந்து அரசு இடமா? அல்லது தனியார் இடமா? என்று தெரிவித்தபிறகு பேசிக் கொள்ளலாம் என்று இருதரப்பினரிடமும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில் நடந்த சாலைமறியல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் பங்குனி உத்திரத் திருவிழா

Last Updated : May 11, 2022, 5:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details