கரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்துவருகின்றனர்.
இந்த ஊரடங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக காய்கறி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் மூஞ்சிக்கல், காமராஜர் சாலை ஆகிய இடங்களில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை விற்பனை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் இங்கு கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.