தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ”அதிமுக அரசைப் பொறுத்தவரையில் இந்த பட்ஜெட்தான் அவர்களின் கடைசி பட்ஜெட் என்று கூறலாம். ஏனெனில், இதற்கு மேலும் அவர்களை, ஆளும் கட்சியாக ஆட்சியில் மக்கள் அமரச் செய்ய மாட்டார்கள்.
மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை கேட்டுப் பெற, தமிழ்நாடு அரசு தயங்கியதால், இன்று அதிக அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களும் அறிவிக்கப்படாத வெற்று பட்ஜெட்டாக உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 25 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு வரக்கூடிய நிதிப் பங்கீடு என்பது 33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு ரூ.26 ஆயிரம் கோடிதான் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதனால் 7 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பற்றி பேச அமைச்சர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் மீது பல ஊழல் புகார்கள் இருப்பதால், தங்கள் மீது நடவடிக்கை பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் யாரும் வாய்திறக்க முற்படவில்லை.
மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியைக் கேட்டுப் பெற முடியாமல் போன காரணத்தால்தான், தமிழ்நாடு மக்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். இதனால் அரசின் சொந்த வருவாய் குறைந்து உலக வங்கியிடம் கடன் கேட்டு நிற்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் கடன் வாங்குவதற்காகத்தான் என்பது தற்போது தெரிகிறது” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: வளர்ச்சிக்கான ஒன்றா அல்லது வாக்குக்கான ஒன்றா?