திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது. பின்னர், ரோப்கார் மூலமாக மலைக் கோயிலுக்குச் சென்று சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்கார முருகனை வழிபட்டார்.
பின்னர், போகர் சித்தரை வழிபட்டு குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “இறைவன் ஒருவனே அவரவர் விருப்பப்படி பழனி முருகனாக, காசி விஸ்வநாதனாக பிள்ளையார்பட்டி விநாயராக, திருப்பதி வெங்கடாசலபதியாக, உருவம் அல்லாத அல்லாவாக, ஏசுவாக வழிபட எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மை. இந்த கடவுள் பெரிது, அந்த கடவுள் பெரிது என்று சொல்பவர்கள், மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர்கள்.
முன்னதாக, பொது சிவில் சட்டம் என்பது இந்து சிவில் சட்டம் அல்ல, அது அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் என்றும், அதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், “சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் பொது சிவில் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்? ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே நாம் நம்பிக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாது. நாம் அனைவரும் ஒருங்கினைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.