தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வழிச்சாலைக்கான தீர்ப்பு மோடிக்கும் எடப்பாடிக்கும் விழுந்த மரண அடி -முத்தரசன் - மோடி

திண்டுக்கல்: எட்டு வழிச்சாலை தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மோடிக்கும் எடப்பாடிக்கும் விழுந்த மரண அடி என திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

By

Published : Apr 9, 2019, 9:17 AM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திண்டுக்கல் உழவர் சந்தை எதிரே நடைபெற்றது. இக்கூட்டத்தில் முத்தரசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "ஒரு நாட்டின் தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் நிறுவனம்போல செயல்பட்டு வருகிறது. இதுவரை சுதந்திர இந்தியாவில் 16 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ளோம். ஆனால் இந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது, வேறுபட்டது. ஏனெனில் இது இரு வேட்பாளர்களுக்கோ அல்லது இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய அரசு மனுதர்ம சாஸ்திரத்தில் இயங்கும் அவலத்தை தடுக்கப் போராடும் ஜனநாயகப் போராட்டம்.

மோடி கையில் கிடைத்த இந்தியா குரங்கு கையில் அகப்பட்ட பூ மாலை போல் அகிவிட்டது. அதனை மீட்க வேண்டிய கடமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி போராடி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒருவர் எதைப் பேச வேண்டும், எதை சிந்திக்க வேண்டும், எதை எழுதவேண்டும் என கூறி வருகிறது. இதில் இருந்து விலகிய முற்போக்குவாதிகளான கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் மரணத்தைப் பற்றி இதுவரை மோடி வாய் திறக்கவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எட்டு வழிச்சாலை உறுதியாக போடப்படும் என்று முதலமைச்சர் கூறினார். எட்டு வழிச்சாலைக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதே அதற்குக் காரணம். அரசின் எந்தப் பணிகள் நடந்தாலும் 20 சதவீத கமிஷன் ஆளும் கட்சியினருக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த கமிஷன் தொகையை பெறுவதற்காகவே எடப்பாடி எட்டு வழி சாலைகளுக்காக குளங்கள், ஏரிகள், விளைநிலங்கள், பள்ளிக்கூடங்கள் என எந்த பாரபட்சமும் இன்றி எல்லாவற்றையும் அகற்ற துணை நின்றார். ஆனால் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் தமிழக விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும், இவ்விவகாரம் குறித்து முதலமைச்சர் அமைதி காக்கக் கூடாது. அவரது நிலைப்பாடு என்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்து மேல்முறையீடு செய்யப்படுமா இல்லையா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், "தமிழக சட்ட ஒழுங்கு குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர், ஏன் இன்னும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்கு பதலளிக்க வேண்டும். உண்மையில் சட்டம்-ஒழுங்கு சீராக இருந்திருந்தால் எப்படி பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஏழு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இருக்கும். இதுவே முதல்வர் வீட்டுப் பெண்ணுக்கு நடந்திருந்தால் இப்படி இருந்திருப்பாரா?" என்று கேள்வியெழுப்பினார்.

"மத்தியில் நிகழவுள்ள ஆட்சி மாற்றதோடு மாநில ஆட்சி மாற்றத்துக்கான தருணமும் வந்துள்ளது. இனி நாம் சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை எடப்பாடி என்ற பெயரில் நடந்து வரும் இந்த எடுபிடி ஆட்சியை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து சரியான நபரை அதிகாரத்தில் அமரச் செய்யுங்கள்" என முத்தரசன் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details