சென்னை:இயக்குநர் சுசிகணேசன் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்ட பிறகும், கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் 'மி டூ' புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசிகணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணையும் செய்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசிகணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.
உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்த லீனா மணிமேகலை, சின்மயி, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட்ட ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும், தனியார் இணையதள செய்தி நிறுவனத்திற்கும் தடை விதிக்க வேண்டும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குநர் சுசிகணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.