கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கே அனுப்பிவைக்கும் முயற்சியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திண்டுக்கல்- கரூர் புறவழிச்சாலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 16 பேர் அடங்கிய மூன்று குடும்பத்தினர் குடிசை அமைத்து லேகியங்கள் விற்பனை செய்துவந்தனர்.
கரோனா தொற்று பரவலின் காரணமாக அரசு அலுவலர்கள் இவர்களை கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சமுதாயக் கூடத்திலும், ஏப்ரல் 24ஆம் தேதி பாரதிபுரத்தில் உள்ள நகராட்சி பள்ளியிலும் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது அவர்களில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே, வெளி மாநிலத்தவர்களின் சொந்த ஊர் திரும்ப அரசினை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலுள்ள வெளி மாநிலத்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.
பின்னர், இவர்களை மாநகராட்சி அலுவலர்கள் தொடர்புகொண்டு, இவர்களை மகாராஷ்டிராவிற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பிறப்பு தான்றிதழ் அளிக்கப்பட்டு, அனைவரும் மகாராஷ்டிரா செல்வதற்கான அனுமதிச் சீட்டினை வழங்கினர்.
இதையும் படிங்க:'எங்கள சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்க' - வெளிமாநிலத் தொழிலாளர்கள்