திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 18 பேருக்கும் கரோனா கண்டறிதல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 10 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின் பாதிக்கப்பட்ட அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.