திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி முழு ஊரடங்கு கடைப்பிடிப்பது தொடர்பாக நத்தம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பேரூராட்சி நிர்வாகம் திட்டம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 10 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி நத்தம் பேரூராட்சி அளவிலும், தாலுகா அளவிலும் உள்ள 23 கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடைகள் மற்றும் வணிக மையங்களை வருகின்ற 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்கு வர்த்தகர்கள், கிராமப்புற வியாபாரிகள், இறைச்சி, மீன் கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்த ஊரடங்கு காலத்திலும் பால், மற்றும் மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பேருராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா ஆணையர் ரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.