கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக, மார்ச் 24ஆம் தேதி இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து கரோனா பெருந்தொற்றுப் பரவல் வேகத்தினால் தடுப்பு நடவடிக்கையாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அரசு அலுவலகங்களை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகள் மற்றும் குறைகளை அரசு அலுவலர்களிடம் கூறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மருத்துவமனைகள், காவல் நிலையம், மின் வாரியம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத்துறைகளைத் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.
அதன்பின்னர் அரசு அலுவலகங்களில் 33 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்க ஆரம்பித்த நிலையில், மே 18ஆம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்களும் 50 விழுக்காடு அரசு ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கத் தொடங்கின. தற்போது வெளியிடப்பட்ட தளர்வு அறிவிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 100 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுக முடியாத சூழல் இருந்தது.
ஐம்பது விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கிய போதும் அங்கிருக்கும் அரசு ஊழியர் யாருக்காவது தொற்று இருப்பது உறுதியானால், உடனடியாக அந்த அரசு அலுவலகம் மூடப்பட்டது. அங்கிருந்த அலுவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் தொற்று பாதிப்பு இருப்பதால் உள்ளே அனுமதிக்கப்படாமல், வாசல்களிலேயே நின்றுவிட்டு அலுவலர்களைச் சந்திக்க முடியாமல் காத்திருந்தனர்.
தொடர்ந்து பலமுறை அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால் மக்களின் நேரம் விரயமானது. இது போன்றச் சூழலை சந்தித்த ஜோதி என்பவர் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து எங்குமே செல்லவில்லை. அதன்பின்னர் பத்திரம் புதுப்பிப்பு செய்வதற்காக அரசு அலுவலகத்திற்குச் சென்றபோது, இன்று நாளை; இன்று நாளை என ஒரு மாதத்திற்கு மேலாக அலைக்கழித்தனர். தினமும் அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் யாரையும் சந்திக்கமுடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் அலையவேண்டாம் நிதானமாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.