திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரசாந்த் என்ற மகன் இருந்தார். ராஜசேகர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு தேவி தனது குழந்தை பிரசாந்த்துடன் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்த பிரசாந்தை தூக்கிக் கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாகக் குழந்தை பிரசாந்த் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பெற்றோரின் அலட்சியம்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு! இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம், தூத்துக்குடியில் மூன்று வயது சஞ்சனா என்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் என கட்ந்த வாரத்தில் மட்டும் பெற்றோரின் அலட்சியத்தினால் ஐந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோரின் அலட்சியத்தையும் அடிக்கோடிடுகிறது.