திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடன் பேசுகையில், "பாரதிய ஜனதா அரசு இதுவரை செய்த கெடுதல்களிலேயே பெரிய கெடுதல் குடியுரிமை மசோதா. இந்த நாட்டை அழிப்பதற்கு இந்த ஒரு சட்டமே போதும்.
50 ஆண்டு காலம் இந்தியாவில் வசித்துவந்த ஒருவர், தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் கட்டாயத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். வங்க தேசத்திலிருந்தோ இலங்கையிலிருந்தோ பர்மாவிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ நேபாளத்திலிருந்தோ உலகில் எந்தப் பகுதியிலிருந்தோ 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறியவர்கள் இப்போது கணக்கெடுத்து இந்தியர்களா? இல்லை ? என்று சோதனை செய்வதென்பது இந்திய அரசியல்சாசன சட்டப்படி தவறானதாகும்.
நமது அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்றால் மனிதர்களை சாதி, மதம், மொழி என எதை வைத்தும் பிரிக்கக்கூடாது என்று சொல்கிறது. அம்பேத்காரும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்காரும் எழுதிய அரசியல்சாசன சட்டத்தை பாஜக திருத்த முயற்சிக்கிறது. இது பெரும் பிழை. நியாயமல்லாத ஒன்று.
நம்முடைய அரசியல் சட்டம் அதனை அனுமதிக்கவில்லை. மத்திய அரசின் இந்தக் குடியுரிமைச் சட்டம் நிறைவேறினால் நாட்டைவிட்டு குறிப்பிட்ட சமூகத்தினர் வெளியேற வேண்டியிருக்கும். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். காங்கிரஸ் கட்சியும் காந்தியமும் இந்தியாவில் வசிக்கிற மக்களை ஒன்றுபடுத்தியது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அவர்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்கிறது.