இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் இதுவரை 3,37 பேர் பாதிக்கப்பட்டும், 77 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஆட்கொல்லி நோயான கரோனா வைரசைக் கட்டுப்படுத்த கடந்த 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வந்து செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. தனிமனித ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பஜாருக்கு வந்த மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு இருப்பதுபோல் எந்தச் சுவடும் இன்றி சாதாரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசின் உத்தரவை மீறி கொல்லுப் பட்டறைகள், டீ கடைகள், பலகாரக் கடைகள், பெட்டிக்கடைகளில் வியாபாரம் படுஜோராக நடைபெறுகிறது.