Bogar Jayanthi Festival 2023: திண்டுக்கல்:பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக இன்று (மே 18) கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பழனி முருகன் கோயில் மலை மீதுள்ள நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி பழனி மலை மீதுள்ள வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் பழனி ஸ்ரீ தண்டபாணி சுவாமியை தரிசிக்க அங்கு செல்லும் லட்சக்கணகானப் பக்தர்கள், போகர் ஜீவசமாதிக்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த போகர் ஜீவசமாதியை அவரின் சீடரான புலிப்பாணி சித்தரின் வாரிசுகள் இன்று வரையில் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சித்தர் போகரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மலைமீது உள்ள போகரின் ஜீவசமாதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (மே. 18) நடந்த சித்தர் போகர் ஜெயந்தி விழாவில் சித்தர் போகர் மற்றும் புலிபாணியால் வணங்கப்பட்டு வந்த பழமையான பச்சை மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழ வகைகள் உட்பட 14 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதினம் ஸ்ரீமத் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரப்படுவதாக கூறப்படும் இந்த போகர் ஜெயந்தி விழாவிற்கு, கோயில் நிர்வாகம் தடை விதிப்பதாக ஏற்கனவே அக்கோயிலின் இணை ஆணையர் நடராஜன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அந்த உத்தரவில், 'போகர் சந்நிதி பூசாரிகள், விதிகளை மீறி, திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் தன்னிச்சையாகவும் போகர் ஜெயந்தி விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இதனால், போகர் சந்நிதியில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
போகர் சந்நிதி பூசாரிகள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இடையூறாக செயல்பட்டு வருவதால், வரும் 18ஆம் தேதி அன்றும் அவர்கள் பிரச்னையில் ஈடுபட முகாந்திரம் உள்ளது. அதனால், அன்றைய தினம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.