மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பெரும்பாலும் பருவ நிலைக்கேற்ப காய்கறிகள், பழ வகைகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பீன்ஸ், அவரை, பூண்டு, ப்ளம்ஸ் உள்ளிட்டவை சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கேரட் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் விளைச்சல் சற்று குறைவாகவே காணப்பட்டது. தற்போது பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேரட் பயிரிடப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு விவசாயத்திற்கு ஏற்ற நல்ல மழை பெய்து உள்ளதால் தற்போது பயிரிடப்பட்ட கேரட் விளைச்சல் நன்றாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.