திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. அதிமுக பிரமுகர். இவர் தனது மோட்டார் சைக்கிளை விற்க முயற்சி செய்து வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் தோட்டியனூரை சேர்ந்த கார் டிரைவர் செங்கோட்டையன் (41) என்பவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக விலை பேசியுள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ராஜா தனது மோட்டார் சைக்கிளை வேடசந்தூர், பழனி சாலையில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, டீக்கடை முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது டீக்கடை அருகே மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் டீக்கடை பகுதிக்கு வந்த செங்கோட்டையன் ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் பவானி அருகே செங்கோட்டையனை கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களுக்காக விளையாடி அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் - ஹாட்ரிக் வெற்றி பெற்ற செஸ் வீராங்கனை நந்திதா