திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்திற்கு, துவரங்குறிச்சியிலிருந்து ஒரு மணிக்கு வர வேண்டிய அரசுப் பேருந்து 20 நிமிடங்களுக்கு முன்பு 12.40க்கு பேருந்து நிலையத்துக்குள் வந்ததாகக் கூறி பேருந்து ஓட்டுநர் ராமசாமி மற்றும் நடத்துநர் சேகர் இருவருக்கும் நத்தம் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் மதன் கார்த்திக் மெமோ வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலாளரை கண்டித்து பேருந்தை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்!
திண்டுக்கல்: நத்தத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், போக்குவரத்து பணிமனை கிளை மேலாளரைக் கண்டித்து பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்.
இது குறித்து விளக்கம் கேட்ட பேருந்து ஓட்டுநர்களை, அவமரியாதையாகப் பேசுவதாகும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அதிக பணிச்சுமை வழங்குவதாகும், அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 60க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் நத்தம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் கோட்ட மேலாளர் ஆனந்தன், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அனைவரும் பணிக்குத் திரும்பினர். இதனால் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, கொட்டாம்பட்டி, கோபால்பட்டி, ஊராளி பட்டி, சிறுகுடி செந்துறை பேருந்துகளின் இயக்கம் தடைப்பட்டதால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகள் அவதியடைந்தனர்.