இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானல் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதிவரை முதல் சீசன் நிலவும். ஆனால், இந்தாண்டு சீசன் தொடங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. தற்போது பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், மாலை நேரங்களில் இதமான குளிரும் நிலவி வருகின்றது.
மேலும் கரோனா பாதிப்பின் காரணமாக சுற்றுலாவும் தடைப்பட்டுள்ளது. இதனிடையே நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துளள்ள பிரையன்ட் பூங்காவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இதில் தற்போது பாப்பி, கஜேரியா அஷ்டமேரியா, பேன்சி உள்ளிட்ட பல வண்ண ரோஜா பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இங்குள்ள கண்ணாடி மாளிகையில் பல வண்ணப் பூக்கள் பூத்துள்ளன. அத்துடன் டேலியா பூக்களும் பூக்கும் சூழ்நிலை உள்ளன. ஆனால் இதனை ரசித்துப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் பூக்கள் அனைத்தும் பராமரிப்பின்றி ஆரம்ப நிலையிலேயே கிள்ளிவிடப்படுகின்றன. இப்பூக்கள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் பூக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய பிரையன்ட் பூங்கா இது குறித்து தோட்டக்கலை அலுவலர் கூறுகையில், “வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் பூங்காவில் 65க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுவார்கள். தற்போது ஏழு நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். பல வண்ணப் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ள நிலையில் இம்மாத இறுதியில் பூக்கும் வண்ணம் மொட்டுக்கள் கிள்ளிவிடப்படுகின்றன. இருப்பினும் அனைத்துப் பூக்களும் மே முதல் வாரத்தில் பூத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: முதன்முறையாக மூடப்பட்ட பழமைவாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்கா!