திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திலிருந்து ஏஎம்சி சாலை வழியாக மணிக்கூண்டுப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் புத்தாண்டு கேளிக்கைகள் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 10:30 மணியளவில் ஏஎம்சி சாலை ஸ்டாலின் காட்டேஜ் அருகே மதுபோதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். தீப்பற்றி எரிந்ததைக்கண்டு சாலையில் நடந்துச் சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், அக்கம் பக்கத்தில் கடைகளில் இருந்தவர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
அந்த வாலிபர் எரிந்த நிலையில் அங்குமிங்குமாக ஓடி சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதில், அந்த வாலிபர் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து தீயில் கருகி உயிருக்கு போராடிய நபரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.