திண்டுக்கல்:நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (21) கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையிலுள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். இவரும் மூங்கில்பட்டி முல்லைநகரைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
இதனை அப்பெண் தனது காதலன் பாரதிராஜாவிற்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு (ஜூன் 21)சென்ற பாரதிராஜா, காதலியை அழைத்துச்செல்ல முயன்றுள்ளார்.
காதலியின் கண் முன்னே காதலன் கொலை:
இதனைக் கண்ட இளம்பெண்ணின் பெற்றோர், சகோதரர், உறவினர்கள் ஆகியோர் இருசக்கர வாகனத்தை மறித்து பாரதிராஜாவுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த மலைச்சாமி அருகிலிருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த இளைஞர் உயிருக்குப் போராடிய நிலையில், அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் பாரதிராஜாவின் உடலை, உடற்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
காதலியின் கண் முன்னே காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளம்பெண்ணின் பெற்றோர்,சகோதரர், உறவினர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க சென்றவர் கொலை - 4 பேர் கைது!