திண்டுக்கல்:பழனி அருகே மானூரை சேர்ந்தவர்கள் காட்டப்பன்-செல்வி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் காவியபாலன் என்ற மகன் உள்ளார். காவியபாலன் பிறந்தது முதலே வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்:
பொதுவாக மனித உடம்பின் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும் நிலையில் சிறுவன் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே இருப்பதால் பிறந்தது முதலே உடல் முழுவதும் தீக்காயம் பட்டது போல் இருப்பதாகவும், இதற்கு ஜீன்கள் தொடர்பான பிரச்னையே காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் எவ்வித முன்னேற்றமும், தீர்வும் கிடைக்கவில்லை என்று சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் படிப்பில் படு சுட்டி:
தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் காவியபாலன் படிப்பில் படுசுட்டியாக உள்ளதாகவும் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
காவியபலனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே மளிகைக்கடை வைத்தபடி கணவன் மனைவி இருவரும் குழந்தையை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று காரணமாக தற்போது இருவரும் வருமானமின்றி தவித்துவருகின்றனர்.
சிகிச்சைக்காக உதவி கேட்கும் பெற்றோர்:
காவியபாலனின் தந்தை காட்டப்பன் 12ஆம் வகுப்பும், தாய் செல்வி பி.ஏ.வும் படித்துள்ளனர். காவியபாலனின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிட வேண்டியும், சிறுவனின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை தந்து ஒன்றிய-மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஓவியங்கள் வாயிலாக மாணவர்களை ஈர்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்!