திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு நகர் பகுதியில் உள்ள ஆய்வாளர் முதல் அனைத்து காவல்துறை அலுவலர்களும் வசித்து வருகின்றனர். இதன் அருகேயே திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குடியிருப்பு மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் உள்ளது.
காவலர் குடியிருப்பில் வெடி வெடித்ததால் பரபரப்பு - திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் வெடி
திண்டுக்கல்: ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாய் ஒன்று ஒரு பொருளை கடித்துள்ளது. அப்போது அது வெடித்ததில் நாய் ரத்த வெள்ளத்தில் உடல்சிதறி இறந்துள்ளது. இதனிடையே இன்று (அக்.15) காவலர் குடியிருப்புக்குள் மூன்று சக்கர வாகனம் ஒன்று உள்ளே செல்லும் பொழுது சுவற்றின் ஓரத்தில் இருந்த குப்பை பகுதியில் உள்ள ப்ளாஸ்டிக் கவரின் மீது வாகனம் ஏறியுள்ளது. அதில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து, திண்டுக்கல் நகர காவல் துறையினர் மற்றும் காவல்துறை தனிப்பிரிவு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக் கவரில் மிருகங்களுக்கு வைக்கும் 7 வெடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகள் காவல்துறை குடியிருப்பு பகுதிக்குள் எப்படி வந்தது என்று திண்டுக்கல் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.