சென்னையில் யு-டியூப் சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனுதர்மம் குறித்து பேசினார். அதில் அவர் மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து பேசியது விவாதத்திற்குள்ளானது. இந்தக் காணொலி சமூகவலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் அவர் இந்து மதத்தைப் புண்படுத்தியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் அனல் பறக்க, மறுபக்கம் அவர் சரியாகக் கூறியதாகவும் மனுதர்ம நூலில் அப்படிக் குறிப்பிட்டப்பட்டுள்ளதாகவும் இன்னொரு சாரர் ஆதரவுப் பதிவுகளிட்டு வருகின்றனர்.
இதனிடையே பாஜகவிலிருந்து திருமாவளவனின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையத்தில் எம்பியும் விசிகவின் தலைவருமான திருமாவளவன் மீது பாஜக மகளிர் அணி தலைவி மாரியம்மாள் தலைமையில் மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
இதைப் போலவே, திண்டுக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்பி., திருமாவளவன் மற்றும் பெரியார் யு-டியூப் சேனல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனாட்சி அரவிந்த் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இணைந்து புகார் அளித்துள்ளனர்.