திண்டுக்கல்: மாங்கரைத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது அவர்களை ஹெச். ராஜா நேற்று (அக். 17) சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் மதுபான கடை அகற்றப்படாததால் போராட்டம் நடத்தப்பட்டது. 1967ஆம் ஆண்டுக்குப் பின் கருணாநிதிதான் மதுபான கடையைத் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தார். தற்போது வெளிநாட்டு மதுபான கடைகள் வந்துவிட்டன.
மதுபான கடைகளால் குடும்பத் தலைவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துள்ளது. மதுபான கடைகளை முழுவதுமாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.