திண்டுக்கல் (கொடைக்கானல்):தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக 7வது நாளாக நேற்று (செப். 12) கொடைக்கானலுக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, கொடைக்கானல் நாயுடுபுரம் விநாயகர் கோயிலில் இருந்து பேரணியாக கேஆர்ஆர் கலையரங்கம், பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் வந்தடைந்தார்.
அங்கு தனது பிரசார வாகனத்தில் இருந்து உரையாற்றிய அண்ணாமலை, "கொடைக்கானல் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய ஒரு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகும். ஆனால் இங்கு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவில், எந்த ஒரு அடிப்படை வசதியும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. முறையான கார் பார்க்கிங் வசதிகள் இல்லை, சாலை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மு.க ஸ்டாலின் கொடைக்கானல் வந்திருந்தார். அப்போது திருட்டுத்தனமாக சென்று பூம்பாறை முருகனை தரிசித்தார். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் பூம்பாறை முருகனை தரிசிக்க வந்த அவர், அதை ஒரு சுற்றுலா போல் பயன்படுத்திவிட்டு சென்றார். இவ்வளவு தூரம் திருட்டுத்தனமாக பூம்பாறை முருகனை தரிசிக்க வந்த அவர், சனாதனத்தை வேறருப்பேன் என சொல்வது எந்த வகையில் நியாயமானது.
மேலும் தான் முதலமைச்சராக பதவியேற்றதும், கொடைக்கானலில் பல்நோக்கு மருத்துவமனை, பல அடுக்கு கார் பார்க்கிங் வசதி, ரோப்கார் சேவை, ஆண்கள் அரசு கலைக் கல்லூரி போன்ற திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக கூறி வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றி தரவில்லை. ஆதித்யா L1ஐ செப்டம்பர் 2 ஆம் தேதி அனுப்பினார்கள். இதில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி சோலார் ஆராய்ச்சி மையத்தின் மூலம் சூரியனில் உள்ள கரும்புள்ளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட போட்டோ முக்கிய பயன்பாட்டில் இடம்பெற்றது.
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு தான். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 மாநாட்டில் இந்தியாவிற்கு தேவையானவை என்ன என்பதை மையப்படுத்தி உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து மிகச் சிறப்பான மாநாட்டை நடத்தினார். பாரதிய ஜனதா சார்பில் 78 மத்திய அமைச்சர்கள் இருந்தும், இன்று வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் கூட அவர்கள் மீது இல்லை.