பிகாரை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை!
திண்டுக்கல்: கொடைரோடு அருகே பிகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் (ஈபி - டவர்) அமைக்கும் பணியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் 10 பேர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், 17 பேர் திண்டுக்கல் அருகில் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (அக்.23) சமையலர் ராஜேந்திர சௌத்ரி(60), விஷேஸ்குமார்(23) என்ற இருவரும் வேலைக்கு செல்லாமல் அவர்கள் கூடாரத்திலே தங்கியுள்ளனர்.
அப்போது மதியம் விஷேஸ் குமாருக்கும் ராஜேந்திர செளத்திரிக்குமிடையே மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேந்திர செளத்திரி விஷேஸ்குமாரை இரும்பு மண் வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் விஷேஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தப்ப முயன்ற ராஜேந்திர செளத்திரியை அப்பகுதியினர் கை, கால்களை கட்டிப்போட்டு அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஷேஸ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
இந்தக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜேந்திர செளத்திரி முன்னுக்குப் பின் முரணாக காவல்துறையினரிடம் பேசியதால் விஷேஸ்குமார் கொலையில் அவர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது வேறு சிலர் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.