திண்டுக்கல்: வத்தலக்குண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களைக் கொண்டு, பசுமை பூங்காவில் ஐந்தாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
வத்தலக்குண்டு பகுதியில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கியது முதல் காய்கறிச் சந்தைகளிலிருந்து தூக்கி வீசப்படும் கழிவு மாம்பழங்கள் மற்றும் வீடுகளில் பிரித்து வாங்கப்படும் உணவுக் கழிவுகளிலிருந்து சேகரிக்கப்படும் மாம்பழங்களைக் கொண்டு, மா கன்றுகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
தூய்மைப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்கள் பேரூராட்சி பசுமை பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டு மாம்பழ விதை தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த விதைகள் உலர வைக்கப்பட்டு நடவுக்குத் தயார் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இல்லாததே இளைஞர்களின் வேலையின்மைக்குக் காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
நன்கு உலர்ந்த மாம்பழ விதைகளைப் பசுமைப் பூங்காவில் உள்ள காலியிடங்களில் நடவு செய்யும் பணியை பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். நாள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடங்கள் வீதம் பாத்தி கட்டி, மாம்பழ விதைகள் நடவு செய்யப்படுகின்றன.