திண்டுக்கல்:பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவிற்கான புதிய கட்டிடத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூன் 11) திறந்துவைத்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், "மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள், காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் நகர்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழனி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக ஆக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்கனவே 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 69 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 124 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.