திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று, “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி தந்தபோது திண்டுக்கல்லுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி தந்தவர் பிரதமர் மோடி. மதுரை - நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலத்தை உருவாக்கியது மோடி அரசுதான்.
திமுக அரசு தமிழக மக்களுக்காக உழைக்கவில்லை, அவரது குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே உழைக்கின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, காவல்துறையினர் கையை கட்டிப் போட்டுள்ளனர். தென் தமிழகத்தில் கடந்த 21 நாட்களில் 41 கொலை நடந்துள்ளது. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது.
தமிழகத்தில் சாராயத்தை பெருக்கியுள்ளார், டாஸ்மாக் கடையை நிறுத்தச்சொல்லி எனக்கு மக்கள் மனு கொடுக்கின்றனர்.
மதுபான விற்பனையால் 44 ஆயிரம் கோடி ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. மதுவிற்று தான் அரசை நடத்தவேண்டும் என்ற நிலை இல்லை. 40 சதவீத மதுபானங்கள் திமுக தலைவர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரின் கம்பெனிகளிடம் இருந்து வருகிறது. மதுக்கடையை மூடிவிட்டு, கள்ளுக்கடையை திறக்கவேண்டும் என்கிறோம்.