திண்டுக்கல்:பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று (ஜன 11) திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “தமிழகம் முழுவதும் 1,250 ஒன்றியத்தில், தை திருநாளான தமிழர் திருநாளை வரவேற்கும் விதமாக “நம்ம ஊரு மோடி பொங்கல்” பாஜக தொண்டர்கள் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த ஒன்றியத்தில் பொதுமக்களுடன் இனைந்து பாஜக உறுப்பினர்கள் மிக விமர்சையாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பிரதமர் மோடி போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இதையடுத்து தமிழகம் என்று ஆளுநர் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. அரசியலுக்காக திமுக இதை பெரிது படுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரையில் கூட அவர் தமிழில் தான் பேசியிருக்கிறார். தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாஜக விட்டுக் கொடுக்காது.
ஆளுநர் அறிக்கையில் தமிழகம் அமைதி பூங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய் இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கா அல்ல. திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக் கூடாது. தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமா என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “பல இடங்களில் மத்திய அரசு மாநில அரசு சுமூகமாக செயல்படுகின்றன. அதிகாரிகளை பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும் இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். திமுக பயன்படுத்தக் கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி கூட அப்படி கூறவில்லை.
12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்ட வடிவை ஆளுநர் நிறுத்தி வைத்தார். யுஜிசி விதி 156 படி வரம்பு மீறியதாகும். இதனால்தான் ஆளுநருக்கும் முதல்வருக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஆளுநருக்கும் திமுகவிற்கும் இடையிலான முதல் பிரச்னை நாங்கள் கொடுத்த பில்லில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு.
2021-ல் ஆளுநருக்கு வந்த அனைத்து பில்லிலும் ஆளுநர் கையெழுத்திட்டார் 2022-ல் 15 பில்லில் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். அதில் 12 பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக நியமிக்க வேண்டும் என்பது. அதில் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. ஏனென்றால் அது 1956 ஆம் ஆண்டிற்கான யுஜிசி சட்டத்திற்கு எதிராகும். ஆளுநர் கையெழுத்து போட்டாலும் அது நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டும். காரணம் இது மாநில அரசின் வரம்பில் இல்லை. இதனால் தான் அவர் கையெழுத்திடவில்லை.