திண்டுக்கல்:தமிழ்நாடு மருத்துவத் துறையின் முதன்மைச் செயலர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்ட ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ஆய்வுசெய்ததில், பழனிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டவும், உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தலைக்காய சிகிச்சை
தொடர்ந்து பேசிய அவர், "பழனி, கொடைக்கானல் முக்கியச் சுற்றுலாத் தலங்களாக இருப்பதால் அதிகளவில் விபத்து ஏற்பட்டு தலைக்காயம் சிகிச்சைக்காக வருபவர்கள் அதிக அளவில் மதுரை, கோவைக்கு அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.
எனவே பழனியிலேயே தலைக்காய சிகிச்சைக்காக நியூரோ மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிடி ஸ்கேன்போல எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
துப்புரவு மேலாளர் கலாட்டா
அப்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரும் பழனி அரசு மருத்துவமனையில் ஒரேயொரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், அதுவும் சுகாதாரமின்றி இருப்பதாகவும் செய்தியாளர் புகார் தெரிவித்தனர்.
அப்போது அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் என்பவர் செய்தியாளரிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து இவை தொடர்பானவற்றைக் கேட்கக் கூடாது என்றும் தகராறு செய்தார்.
இதனால், துப்புரவு நிறுவன மேலாளருக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மேலாளர் விக்னேஷ் செய்தியாளரைத் தாக்க முற்பட்டார். இதனையடுத்து சக ஊழியர்கள் விக்னேஷை தடுத்து அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் மத்தியிலேயே மருத்துவத் துறை முதன்மைச் செயலர் முன்னிலையில் பத்திரிகையாளர்களைத் தாக்க முயன்ற தனியார் துப்புரவு நிறுவன மேலாளர் விக்னேஷின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பழனி அரசு தலைமை மருத்துவரிடம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
மாநில பத்திரிகை நலச்சங்கம் புகார்
திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர், மருத்துவத் துறை முதன்மைச் செயலர் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பழனியில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ்நாடு செய்தித் துறை நல சங்கம் சார்பாககேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மருத்துவத் துறை முதன்மைச் செயலர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 'மேலாளர் விக்னேஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் ரூ.24 லட்சம் ரொக்கம், 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி