நம் நாட்டில் உள்ள பழமை வாய்ந்த, தனிச்சிறப்பு மிக்க வரலாற்றுடைய தயாரிப்பு பொருட்களுக்குத் தனி அடையாளம் வழங்கும் விதமாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புவிசார் குறியீட்டிற்கான சட்டம் இந்தியாவில் 2003ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படும் அல்லது விளைவிக்கப்படும் பொருட்கள் தனிச்சிறப்பு பெற்றால், அவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொருளை வேறு ஒரு ஊரில் தயாரிக்கப்பட்ட பொருளாக விற்க முயன்றால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பூட்டு என்பது ஒரு பாதுகாப்பு கருவி... தமிழ்நாட்டில் பூட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திண்டுக்கல் பூட்டுதான். திண்டுக்கல் மாவட்டம் பூட்டு தயாரிப்பதற்கு பெயர் போன இடம். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் பூட்டு தொடக்கத்தில் சங்கரலிங்க ஆசாரி என்பவரால் அழகிய வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டது. அவரிடம் தொழிலைக் கற்றுக் கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உழைக்கும் வலிமை பொருந்திய திண்டுக்கல் பூட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி புதூர், அனுமந்த நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பூட்டு தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது.
திண்டுக்கல்லில் தண்ணீர் வறட்சியால் விவசாயம் இல்லாதபோது, மறு தொழிலாக உருவானதுதான் பூட்டுத் தொழில். இதன் தொடக்க காலத்தில் இரவு பகல் பார்க்காமல் பூட்டு செய்யும் தொழிலை குடிசைத் தொழிலாக செய்து வந்தனர். இயந்திரங்கள் வந்திருந்தாலும் திண்டுக்கல் பூட்டிற்கு இணையானது எதுவும் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கத்தால், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.