திண்டுக்கல்: செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சியில் சேடப்பட்டி பெரிய பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அப்பகுதி மக்களால் அம்மனை அலங்கரித்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
கடந்த வருடம் கரோனா தொற்றினால் ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இதனால் கோயிலிலுள்ள உண்டியல் கடந்த 2 ஆண்டு காலமாக திறந்து எண்ணப்படவில்லை. இதனால் உண்டியலில் அதிக பணம் உள்ளதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த வாரம் இரவு நேரத்தில் உண்டியலை திருடிச் சென்றுவிட்டார்.
திருட்டு சம்பவம் குறித்து அறிந்த கோயில் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் துறையினர் கோயிலில் ஆய்வு செய்தனர்.
கோயில் உண்டியலில் திருட்டு பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆய்வில், உண்டியலில் பணம் திருடியது அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சரவணக்குமார் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, கடந்த 26ஆம் தேதி அதிகாலை அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:போதை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 7 பேர் கைது