திண்டுக்கல்: எப்போதும் பசுமை சூடியிருக்கும் மலைகள், இப்போது பனியும் போர்த்தியிருக்கிறது. உல்லன் பாதுகாப்பு இல்லாமல் பெரியவர்களே வெளியேவர தயங்கும் குளிரில், வெறும் விளையாட்டுடைகள் அணிந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் சிறுவர்கள். தங்களின் வயதுக்கேற்ற வரிசையில் நிற்கும் அவர்களின் கையில், வளர்த்திக்கேற்ற வகையிலான சிலம்பக் கம்பு.
பிஞ்சு முதல் பருவக் குழந்தைகள் வரையுள்ளவர்களின் விரல்களில் லாகமாகச் சூழலும் சிலம்பக்கம்புகள், அவை காற்றை மட்டுமல்ல, குளிரையும் குழந்தைகளை அண்டவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. வித்தைபுரியும் குழந்தைகளின் முன்நின்று விளையாட்டின் சூட்சுமங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தார் சிலம்பம் ஆசிரியர் வடிவேல்.
கொடைக்கானல் அருகே, 20 கி.மீ. தள்ளியிருக்கிற பூம்பாறை கிராமத்துக்காரர் வடிவேல். மலை வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட மக்களுக்கிடையில் வளர்ந்த வடிவேல், இளங்கலை தொழில்நுட்ப (பி.டெக்.) பட்டதாரி. சிலம்பக்கலை மீது ஆர்வம் கொண்ட இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கலையைக் கற்றுவந்தார்.
கலை கைவசமானதும் திருப்தியடையாத வடிவேலின் மனம், அடுத்து என்ன என்ற கேள்வியுடன் பயணித்தது. அனுபவம் ஒருவனை ஆசானாக்கும் என்பதற்கிணங்க, தான் கற்றறிந்த கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க விரும்பியிருக்கிறார் வடிவேல். விளைவு, 'ஸ்ரீ வீரஆஞ்சநேயா சிலம்பப் பயிற்சிப் பள்ளி'.
பள்ளிப் படிப்பைத் தாண்டி, திறன்வளர பயிற்சிகளுக்கு அதிக வாய்ப்பில்லாத மலைவாழ் குழந்தைகளுக்கு சிலம்பக் கலையைப் பயிற்சிவிக்கிறது ஸ்ரீ வீரஆஞ்சநேயா சிலம்பப் பயிற்சிப் பள்ளி. போதிய விழிப்புணர்வு இல்லாததால் குறைவான மாணவர்களுடன் தொடங்கிய பயிற்சிப் பள்ளியில், தற்போது 400 பேர் பயிற்சி பெறுகின்றனர் என்கிறார் வடிவேல்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பக்கலையில், அடி வரிசை, கோர்வை, படைவீச்சு, வாள் வீச்சு, அலங்காரச் சிலம்பம், தீப்பந்தம் என நிறைய வகைகள் இருக்கின்றன. சிலம்பம் விளையாட வயது வித்தியாசம் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விளையாடலாம். சிலம்பாட்டம் சிறந்த உடற்பயிற்சி விளையாட்டு. இந்த விளையாட்டின் உள்கூறுகள், உடலினை உறுதிசெய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை விளையாடுவதால் உடல் உறுதியாகவும், மனம் அமைதியுடன், நேர்மறை எண்ணங்கள் அதிகமாகிறது என்கிறார் சிலம்பம் ஆசிரியர் வடிவேல்.