திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் வத்தலகுண்டு பிரதான சாலையில் நகைக் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் திண்டுக்கல் டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், “வத்தலகுண்டு வடக்கு மல்லணம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் விஜயராஜன் (38). இவர் மனை வணிக இடைத்தரகர் தொழில் செய்துவருகிறார், எனதுஅண்ணன் நகைக் கடை வைத்திருப்பதாக அறிமுகமாகி எங்களிடம் நகைகளை வாங்கி வந்தார்.
இந்நிலையில் 75 லட்ச ரூபாய் மதிப்பிலான 280 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு அதற்கு ரூ.50 மற்றும் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவந்தது.
இது தொடர்பாக விஜயராஜனிடம் சென்று கேட்டபோது எங்களை அலைக்கழிப்பு செய்துவந்தார். ஒருகட்டத்தில் பணத்தைத் தர முடியாது என மிரட்டல்விடுத்தார். இவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நகைகளை மீட்டு தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புகார் மனு தொடர்பாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் ரவளி பிரியா உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் சத்யா ஆகியோர் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கல் சேகர் பவுன்ராஜ், ஜோசப், தர்மர், ஆல்பர்ட் ராய் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதனிடையே நகை வாங்கி நூதன மோசடி செய்தது தெரியவந்ததால் விஜயராஜனை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு - பேருந்தை தீயிட்டு கொளுத்திய ஊர் மக்கள்!