திண்டுக்கல்:ஆலகுவார்பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல், சீலப்பாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்திவிட்டு அருகே இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
போதையில் மிதந்த ஆசாமி:
போதை தலைக்கேறியதால் தடுமாறிப்போய் கீழே விழுந்த முருகவேல், பாதை முழுவதும் நீர் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த நீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார்.
மூன்று மணி நேரமாக மிதந்த முருகவேலை, கள்ளச்சந்தையில் மது வாங்க வந்திருந்த மற்றொரு நபர் கண்டு, அதிர்ச்சியுற்று, ஓடை பாலத்தின் அடியில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
போதையில் தண்ணீரில் மூன்று மணி நேரம் மிதந்த உடல்: மீட்க முயற்சித்தபோது உயிருடன் எழுந்து வந்த அதிசயம்..! காவல் துறையினர், நீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உடலை மீட்க முயற்சித்தபோது, பெரும் சத்தத்துடன் நீரில் நீந்திக் கொண்டே ஓடை பாலத்தின் அடியில் இருந்து இறந்ததாக கருதப்பட்ட அந்த உடல் வெளியே எட்டிப்பார்த்தது.
இதனைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து தாடிக்கொம்பு அருகே உள்ள ஆலகுவார்பட்டியைச் சேர்ந்த முருகவேல் தான் இவர் என்பதும், இவர் தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து முருகவேலின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
முழு ஊரடங்கு நேரத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு வெளியே கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருவதால், இது போன்ற போதை ஆசாமிகள் நீரில் மிதக்கும் சாகசங்களும் நிறைய வெளிப்படுகின்றன.
இதையும் படிங்க:சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் - இரு காவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!