திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தனிவழியில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோப் கார், மின் இழுவை ரயில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று போடிநாயக்கனூரில் இருந்து கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் செல்ல ரோப் கார் நிலையத்திற்குச் சென்றார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், தான் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்றும்; தன்னை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டபோது, உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை வரிசையில் வருமாறும், மேலும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நடக்கமுடியாமல் வரிசையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருப்புசாமி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, போடிநாயக்கனூரில் இருந்து பழனி கோயிலுக்கு இன்று காலை வந்ததாகவும், முதலில் மின்இழுவை ரயில் நிலையத்திற்குச்சென்றபோது அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.